கோத்தா பாரு: மலேசியாவின் கோலா கிராய் நகரில் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தனது காதலரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான 28 வயது பெண், காய்கறி நறுக்கும் கத்தியால் தனது காதலரின் வயிற்றில் மூன்று முறை குத்தியதாக நம்பப்படுகிறது. மானெக் உராய் பகுதியில் உள்ள டத்தாரான் லெமாங்கில் உள்ள பொதுக் கழிவறை ஒன்றில் ஆடவர் ஒருவர் நினைவிழந்த நிலையில் கிடந்ததாக திங்கட்கிழமை (ஏப்ரல் 1) மாலை 6.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகம்மது ஸாக்கி ஹாருண் தெரிவித்தார்.
“அந்த 45 வயது ஆடவரின் வயிற்றில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. ஆனால் அவர் கிடந்த இடத்தில் ரத்தம் ஏதும் காணப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது,” என்று திரு முகம்மது ஸாக்கி கூறியதாக சினார் ஹரியான் ஊடகம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 3) தெரிவித்தது.
“குற்றவியல் சட்டம் 342 பிரிவின்கீழ் அந்த ஆடவர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமான முறையில் கட்டுப்படுத்தியதாக ஏற்கெனவே சந்தேகிக்கப்பட்டவர் என்பதும் பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று மாண்ட ஆடவர், அவரது காதலி என்று நம்பப்படும் சந்தேக நபரை திரங்கானு மாநிலத்தில் உள்ள செட்டியு மாவட்டத்தில் உள்ள சுங்கை தோங் பகுதியிலிருந்து கோலா கிராயில் உள்ள பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாக திரு முகம்மது ஸாக்கி சொன்னார். பின்னர் சந்தேக நபர் ஆடவரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாகவும் ஆடவர் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாண்ட ஆடவர் மீது ஏற்கெனவே பல போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்டவற்றைப் புரிந்ததாகவும் திரு முகம்மது ஸாக்கி கூறினார். குற்றவியல் சட்டம் 302ஆம் பிரிவின்கீழ் இந்த விவகாரத்தின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.