பைடன் எச்சரிக்கை: இஸ்ரேலுக்கான ஆதரவை அமெரிக்கா கட்டுப்படுத்தக்கூடும்

2 mins read
f6a1015f-8d5b-4d14-83a0-c746cd80db93
‘வோர்ல்ட் சென்ட்ரல் கிச்சனி’ன் வாகனம் இஸ்‌ரேலின் வான்வெளித் தாக்குதலுக்குள்ளானதில், அதிலிருந்த மனிதாபினமான உதவிகளை மேற்கொண்டிருந்த வெளிநாட்டினர் உட்பட எழுவர் உயிரிழந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில், பாலஸ்தீனப் பொதுமக்களையும் உதவிப் பணிகளில் ஈடுபடுவோரையும் இஸ்ரேல் பாதுகாக்கவேண்டும்; இல்லாவிடில் போரைப் பொறுத்தவரை வா‌ஷிங்டன், இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவைக் கட்டுப்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ‌ஜோ பைடன், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை எச்சரித்துள்ளார்.

காஸா போரில் இஸ்ரேல் அதன் ராணுவ உத்திகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா பல மாதங்களாகக் குரல் எழுப்பி வந்துள்ள நிலையில் திரு பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 2) இஸ்ரேலியத் தாக்குதலால் உதவிப் பணிகளை மேற்கொண்டுவந்த எழுவர் கொல்லப்பட்டனர்.

அச்சம்பவம் உலகளவில் கோபத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதல் தாங்கள் இழைத்த தவறு என்பதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

முன்னதாக காஸா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத வகையில் அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிராகரிக்கும் வண்ணம் பேசியது.

பாலஸ்தீன பொதுமக்கள், உதவிப் பணிகளை மேற்கொள்வோர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய இஸ்ரேல் எடுக்கும் முயற்சிகளைப் பொறுத்தே இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு அமையும் என்று அமெரிக்கா கூறியது. பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதைக் குறைக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திரு பைடன், திரு நெட்டன்யாகுவிடம் தொலைபேசிவழி சொன்னதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இரு தலைவர்களும் பேசிய தொலைபேசி உரையாடல் 30 நிமிடங்கள் நீடித்தது. அதில் உடனடியாகப் போரை நிறுத்துவது அவசியம் என்று திரு பைடன் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வகைசெய்யும் ஒப்பந்தத்தைத் தாமதமின்றி ஹமாஸ் அமைப்புடன் செய்துகொள்ளுமாறும் திரு பைடன் குறிப்பிட்டார்.

இத்தகவல்களைக் கொண்ட அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதில் திரு பைடனின் நிலைப்பாட்டில் பெரிய அளவிலான மாற்றம் தெரிந்தது.

காஸாவில் பலர் கொல்லப்படுவதும் அப்பாவி பொதுமக்கள் பசியால் தவிப்பதும் நிறுத்தப்படவேண்டும் என்று திரு பைடனுக்கு அமெரிக்காவில் அரசியல் ரீதியாக நெருக்குதல் இருந்து வருகிறது. அந்த நெருக்குதல், திரு பைடன் இஸ்ரேலுக்கு விடுத்த பதிலில் தெரிவதாக நம்பப்படுகிறது.

“பொதுமக்களுக்குத் தீங்கு ஏற்படுவதையும் மனிதர்கள் அவதிப்படுவதையும் உதவிப் பணிகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பையும் கையாள இஸ்ரேல் திட்டவட்டமான, தெளிவான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வரைந்து செயல்படுத்தவேண்டும் என்பதை திரு பைடன் எடுத்துரைத்தார்,” என்று வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

“அந்த வகையில் காஸா போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு, இஸ்ரேல் எவ்வாறு உடனடி நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்பதையும் அதிபர் திட்டவட்டமாகச் சொன்னார்,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்