இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக விசாரிக்கும் ஆஸ்திரேலியா

இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக விசாரிக்கும் ஆஸ்திரேலியா

2 mins read
f7b3f926-7cd1-48fb-b5eb-1e920a3c3ee4
இஸ்ரேல் ஏப்ரல் 2ஆம் தேதி உணவு உதவி அமைப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 7 தொண்டூழியர்கள் கொல்லப்பட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: இஸ்ரேல் ஏப்ரல் 2ஆம் தேதி உணவு உதவி அமைப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியது. அதில் ஏழு தொண்டூழியர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஆஸ்திரேலியக் குடிமகன் பிரான்க்காமும் ஒருவர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலை எதிர்த்து ஆஸ்திரேலியா குரல் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசாங்கம் விசாரணை நடத்துவதாக தெரிவித்தது.

இந்நிலையில் அந்த விசாரணைக் குழுவில் ஒரு சிறப்பு அதிகாரியை பணியமர்த்த உள்ளதாக ஆஸ்திரேலியா சனிக்கிழமை (ஏப்ரல் 6) அறிவித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் விசாரணை சரியாக நடத்தப்பட்டது என்ற நம்பிக்கை கிடைக்கும் என்று கேன்பரா தெரிவித்தது.

சிறப்பு அதிகாரி குறித்து இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.

உணவு உதவி அமைப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமையன்று இரண்டு அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது. மேலும் ஒரு மூத்த படைத்தளபதிக்குக் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் அது கூறியது.

இஸ்ரேலின் அந்த தாக்குதல் நடவடிக்கையில் பல குளறுபடிகளும் விதிமீறல்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்த நாள் அன்றே இஸ்ரேல் தகுந்த முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியதாக பென்னி வோங் கூறினார்.

இந்த தாக்குதல் நடவடிக்கையை எளிதில் கடந்து செல்ல முடியாது, விசாரணையில் கிடைக்கும் அனைத்து ஆதாரங்களும் பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட ஏழு தொண்டூழியர்களில் பிரிட்டிஷ்காரர், போலந்து குடிமகன், பாலஸ்தீனர், கனடிய - அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் ‘வோர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ எனும் உணவு உதவி அமைப்புக்கு உதவிசெய்து வந்தனர்.

ஊழியர்கள் பாதுகாப்பான இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டதாக உதவி அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

ஊழியர்கள் சென்ற வாகனத்தில் தெளிவாக உதவி அமைப்பின் சின்னங்கள் இருந்ததையும் ‘வோர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ குறிப்பிட்டது.

இஸ்ரேல் ராணுவத்திடம் வாகனம் செல்லும் வழிகள் குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். கப்பல் வழியாக வந்த 100 டன் உணவுப் பொருள்களை டெய்ர் அல்-பாலாவில் உள்ள ஒரு கிடங்கில் வைத்துவிட்டு வாகனம் வெளியாகும் போது அது தாக்கப்பட்டதாக அமைப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸாபோர்