ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்

1 mins read
79e6a48a-f194-4d5d-9a65-79971cee74ba
சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) வர்‌‌ஜின் அட்லான்டிக் விமானமும் பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொண்டன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டி‌ஷ் தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் வர்ஜின் அட்லான்டிக் விமானம் ஒன்றின் இறக்கை நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் விமானத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வர்ஜின் அட்லான்டிக் விமானம் இருந்த இடத்திலிருந்து நகற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) நிகழ்ந்தது.

பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று ஹீத்ரோ தெரிவித்தது. மேலும், இச்சம்பவத்தால் தங்களின் செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதாகத் தெரியவில்லை என்றும் ஹீத்ரோ குறிப்பிட்டது.

“எங்கள் விமானத்தைப் பொறியாளர்கள் சோதித்து வருகின்றனர். சம்பவத்தால் நமது பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க மாற்று விமானச் சேவையை ஏற்படுத்தித் தந்துள்ளோம்,” என்று அறிக்கை ஒன்றில் பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.

காலியாக இருந்த தனது போயிங் 787-9 விமானம் பயணம் செய்த பிறகு ஓடுபாதையின் மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சம்பவம் நிகழ்ந்ததாக வர்ஜின் அட்லான்டிக் கூறியது. சம்பவம் ஹீத்ரோவின் மூன்றாம் முனையத்தில் நிகழ்ந்ததாகவும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்