ஜெனிவா: இஸ்ரேலியத் தாக்குதலால் காஸாவில் உள்ள ஆகப் பெரிய மருத்துவமனை சடலங்களைக் கொண்ட சாம்பல் நிறைந்த பகுதியாகக் காட்சியளிக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) உலகச் சுகாதார நிறுவனம் அவ்வாறு சொன்னது.
காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட பிறகு கடந்த திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 1) இஸ்ரேல் அங்கிருந்து தனது படைகளை மீட்டுக்கொண்டது. அந்தக் காலகட்டத்தில் அம்மருத்துவமனையில் பாலஸ்தீன பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
அல்-ஷிஃபா மருத்துவமனை, பாலஸ்தீனத்தின் ஆக முக்கியமான மருத்துவ நிலையமாக விளங்கியது.
மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து எடுக்கப்பட்ட பல முயற்சிகளுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் (ஏப்ரல் 5) தங்களால் அம்மருத்துவமனைக்குப் போக முடிந்ததாக ஐக்கிய நாட்டுச் சபையின்கீழ் இயங்கும் உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. அங்கு ஏற்பட்ட பெரும் அழிவை நிறுவனம் விவரித்தது.
“உலகச் சுகாதார நிறுவனமும் அதன் பங்காளிகளும் அல்-ஷிஃபா மருத்துவமனையைச் சென்றடைந்தன. ஒரு காலத்தில் காஸா சுகாதாரக் கட்டமைப்பின் அடித்தளமாக இருந்த அது, ஆக அண்மைய தாக்குதலுக்குப் பிறகு இப்போது மனித இடுகாட்டைக் கொண்ட காலி இடமாக இருக்கிறது,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானொம் கேப்ரியெசஸ் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். நிறுவனத்தின் குழு அந்த மருத்துவமனையில் குறைந்தது ஐந்து சடலங்களைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
“இப்போதைக்காவது மருத்துவமனையை அடிப்படை நடிவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் சாத்தியமில்லை,” என்று திரு டெட்ரோஸ் சென்னார். அந்த வளாகத்தில் எஞ்சிய கட்டடங்களைப் பிற்காலத்தில் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய ஒரு பொறியாளர்க் குழு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஸாவில் முக்கியமான 36 மருத்துவமனைகளில், 10 மட்டுமே ஓரளவு செயல்படக்கூடிய நிலையில் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

