ஆஸ்திரேலிய வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் மீட்பு

1 mins read
016c46fd-624b-459a-ab92-7d3e0074e29f
கிழக்கு ஆஸ்திரேலியாவை கனமழையும் வெள்ளமும் தாக்கியபின் ஊலகோங் என்ற பகுதியில், நிலச்சரிவினால் பாறைகளும் குப்பையும் சாலையை துண்டித்த நிலையில் ஒருவர் அங்கிருந்து நடந்து செல்லும் காட்சி. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) அறிவிக்கப்பட்டது.

வார இறுதியில் கனமழை காரணமாக சிட்னி நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 300 வீடுகளில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக அவசரநிலை சேவை மையம் தெரிவித்தது.

மிகக் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் வெள்ளநீர் பரவலாக சேதத்தை ஏற்படுத்தியதாக அவசரநிலை நிர்வாகத்துக்கான மத்திய அமைச்சர் கேத்தரின் கிங் விளக்கினார்.

இந்தப் பேரிடர் ஏற்படுத்திய தாக்கம், சேதம் ஆகியவற்றை நியூ சவுத் வேல்ஸ் அரசு தொடர்ந்து மதிப்பிட்டு வருவதாக திருவாட்டி கிங் கூறினார்.

பல பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்ததாலும் வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டதாலும் கிட்டத்தட்ட 200 மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவசரநிலை சேவையை நிர்வகிக்கும் அம்மாநில அமைச்சர் ஜிகாத் டிப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஏறக்குறைய 5,000 தொண்டூழியர்கள் இரவு முழுக்கப் பணியாற்றியதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்