போர் 7வது மாதத்தை எட்டிய வேளையில் படைகளை மீட்கத் தொடங்கியது இஸ்ரேல்

போர் 7வது மாதத்தை எட்டிய வேளையில் படைகளை மீட்கத் தொடங்கியது இஸ்ரேல்

2 mins read
7665b4d8-df0d-4ad3-a89d-e66945f0c1f0
ரஃபா நகரில் அடைக்கலம் புகுந்த பாலஸ்தீன குடிமக்கள், காஸா தென்பகுதியில் தரைப்படைகளை இஸ்ரேல் மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கான் யூனிஸ் நகருக்குத் திரும்பினர். - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) ஏழாவது மாதத்தை எட்டிய வேளை, காஸாவின் தென்பகுதியில் இருந்து இஸ்ரேல் தனது படையினரை மீட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

காஸா தெற்கு வட்டாரத்தில் ஒரே ஒரு படையணியைத் தவிர்த்து இதர எல்லா தரைப்படை வீரர்களையும் தனது ராணுவம் மீட்டுக்கொண்டுவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இருப்பினும், இது தொடர்பான மேல்விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை. மேலும், தென்பகுதி ரஃபா நகரில் தாக்குதல் தொடுக்கப்போவதாக இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருவதை இந்தப் படைமீட்பு தள்ளிப்போடுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

ஹமாஸ் போராளிக் குழுவைத் துடைத்தொழிக்க ரஃபா மீது படையெடுப்பது அவசியம் என்று இஸ்ரேலியத் தலைவர்கள் கூறி வந்தனர்.

போர் நிறுத்தம் மற்றும் பிணையாளிகள் விடுதலையை வலியுறுத்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு எகிப்து தயாராகி வரும் வேளையில் இஸ்ரேலின் படைமீட்பு நிகழ்ந்து உள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் பேராளர்களுக்கு இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைக்கு எகிப்து நடுநிலையாளராக இருந்து வருகிறது.

அந்தப் பணியில் அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை இயக்குநர் வில்லியம் பர்ன்ஸும் கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல் தானியும் இணைய இருப்பதாக எகிப்தின் அல்-காஹெரா நியூஸ் தெரிவித்து உள்ளது.

பேச்சுவார்த்தைத் தொடங்க இருக்கும் வேளையில் ஹமாஸ் போராளி இயக்கம் தனது அடிப்படைக் கோரிக்கைகளை உறுதிப்படுத்தி உள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

காஸாவில் முழுமையான போர் நிறுத்தமும் இஸ்ரேலியப் படைகளின் ஒட்டுமொத்த வெளியேற்றமும் ஹமாஸ் முன்வைத்துள்ள அடிப்படைக் கோரிக்கைகள்.

காஸாவில் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்ட இரு அதிகாரிகளைத் தவறுதலாகச் சுட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அரிதாகத் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போர்நிறுத்த முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.

பஞ்சம், பட்டினி காஸாவை வாட்டப்போகிறது என்று மனிதநேயர்கள் கூறிவரும் நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்ட அமெரிக்காவின் டபிள்யூசிகே அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

தமது படையினருக்கு அதில் தொடர்பு இருப்பதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த விவகாரத்தை சுயேச்சைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கை இன்னும் தணியவில்லை.

ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டது மனிதாபிமானத்துக்கு எதிரான போரைக் காட்டுவதாக டபிள்யூசிகே நிறுவனர் ஜோஸ் ஆண்ட்ரஸ், ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்கியதைத் தொடர்ந்து 2023 அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது. இஸ்ரேலின் கணக்குப்படி, போரில் 1,170 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிப் பொதுமக்கள்.

ஆனால், இந்தப் போரில் குறைந்தபட்சம் 33,175 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் இயக்கம் வழிநடத்தும் சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) கூறியது.

குறிப்புச் சொற்கள்