காஸாவுக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருள் அனுப்பும் ஈராக்

காஸாவுக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருள் அனுப்பும் ஈராக்

1 mins read
8ed89577-81b4-4a87-8fe4-0b1d3561796a
கான் யூனிஸ் நகரில் பெரும் சேதத்துக்கு உள்ளான மருத்துவமனைக் கட்டடம் ஒன்று. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கெய்ரோ: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஸாவுக்கு 10 மில்லியன் லிட்டர் அளவிலான எரிபொருளை அனுப்ப ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 7) ஈராக் ஒப்புக்கொண்டது.

ஈராக் பிரதமர் முகம்மது ‌ஷியா அல்-சுடானி இத்தகவலைத் தெரிவித்தார். மேலும், காஸாவில் காயமடைந்த பாலஸ்தீனர்களை அழைத்து வந்து அவர்களுக்கு அரசாங்க, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்க ஈராக் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் திரு அல்-சுடானி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

காஸாவில் எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள், ரொட்டிக் கடைகள், நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை முடங்கிப்போய் இருக்கின்றன.

சென்ற அண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து 1,200 பேரைக் கொன்று 253 பேரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தனர் என்று இஸ்ரேல் தரப்புப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து காஸாவில் போர் மூண்டது.

அதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 33,175 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் 75,886 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்