ஹாங்காங்: சீனப் பொருளியல் இந்த ஆண்டு (2024) 5.3 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சொத்துச் சந்தை நிலைத்தன்மை அடைவதும் வெளிநாட்டுத் தேவைகள் அதிகரிப்பதும் அதற்குக் காரணங்கள்.
ஆசியான்+3 நாடுகளின் முழுமையான பொருளியல் குறித்த ஆய்வு அலுவலகம் (அம்ரோ) ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சீனப் பொருளியலின் வளர்ச்சி இந்த வட்டாரத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று கருதப்படுகிறது.
அரசாங்க உதவியுடன் சீனாவின் சொத்துச் சந்தை படிப்படியாக மீட்சிகண்டு வருகிறது. சொத்துச் சந்தை முதலீட்டு வளர்ச்சிக்கு இது உதவும் என்றும் இந்த வட்டாரத்தில் இதன் தாக்கத்தை உணர முடியும் என்றும் அம்ரோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் இவ்வாண்டுக்கான அதிகாரபூர்வ வளர்ச்சி இலக்கு 5 விழுக்காடு ஆகும்.
சவால்கள் நிறைந்திருப்பதால் அரசாங்கம் கூடுதலாக உதவி செய்தால்தான் இது சாத்தியம் என்று கருதப்படுகிறது.
இவ்வேளையில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 4.6 விழுக்காடு விரிவடையும் என்று புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பங்குபெற்ற வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றில் இந்த ஆண்டு 4.5 விழுக்காட்டு வளர்ச்சி பதிவாகும் என்கிறது அம்ரோ.
பகுதி மின்கடத்திகள் போன்றவற்றின் ஏற்றுமதி மீட்சி, சுற்றுப்பயணத் துறை ஆகியவற்றால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அது கூறியது.