காஸாவில் நெட்டன்யாகுவின் அணுகுமுறை தவறானது: அமெரிக்க அதிபர் பைடன்

2 mins read
cdc2e9fb-fb6c-4d80-8ee5-a0af14310c54
தெற்கு காஸா நகரான கான் யூனிஸில் போரால் சிதைந்த கட்டடங்கள். - படம்: இபிஏ

வாஷிங்டன்: காஸாவில் நிகழும் போரில் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவின் அணுகுமுறை தவறானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்து உள்ளார்.

ஹமாஸ்-இஸ்ரேல் போரை நெட்டன்யாகு கையாளும் விதத்தையும் அவர் குறைகூறினார்.

அமெரிக்காவின் ஸ்பானிய மொழி தொலைக்காட்சியான யுனிவிஷனுக்கு திரு பைடன் பேட்டியளித்து இருந்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) வெளியிடப்பட்டன.

“நெட்டன்யாகு தவறு இழைக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்றார் அமெரிக்க அதிபர்.

காஸாவில் இஸ்ரேல் குண்டுகள் வீசிய செயலை கண்மூடித்தனமானது என்றும் மிதமிஞ்சிய ராணுவ நடவடிக்கை என்றும் திரு பைடன் ஏற்கெனவே குறைகூறி இருந்தார்.

இதற்கிடையே, திரு பைடன் கடந்த வாரம் திரு நெட்டன்யாகுவை தொலைபேசியில் அழைத்ததாக வெள்ளை மாளிகை கூறியது.

மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டு இருந்த டபிள்யூசிகே உதவிக் குழுவைச் சேர்ந்த ஏழு பேரை வான்வழித் தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமரை திரு பைடன் அழைத்துப் பேசினார்.

அப்போது, காஸாவில் உதவிப் பணியாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க அமெரிக்கா உறுதிபூண்டிருப்பதால் இஸ்ரேலுக்கு அளிக்கும் ஆதரவில் நிபந்தனை விதிக்கப்படும் என்று திரு பைடன் மிரட்டல் விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணலில் திரு பைடன் தெரிவிக்கையில், உணவும் மருந்துப் பொருள்களும் காஸா முழுவதும் சென்று சேரும் வகையில் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் கூறி இருக்கிறேன்,” என்றார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல் அனைத்துலக எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள், அரபு-அமெரிக்கர்கள், போரை எதிர்க்கும் பொதுநல ஆர்வலர்கள் போன்றோர் மாதக்கணக்கில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காஸாவில் நிரந்தரப் போர்நிறுத்தம் வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவ உதவியில் கட்டுப்பாடுகன் தேவை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பஞ்சம், பட்டினி, வன்முறை அபாயம்

இந்நிலையில், காஸா வட்டாரத்தில் பஞ்சம், பட்டினி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த நிலை அங்கு வன்முறையை ஏற்படுத்தி நீண்டகாலப் பூசலுக்கு வழிவகுத்துவிடும் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் எச்சரித்து உள்ாளர்.

காஸா குடிமக்களில் பெரும்பாலானோர் வீடற்றவர்களாகிவிட்ட நிலையில் பஞ்சமும் நோய்களும் அவர்களை வாட்டி வதைக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸாவுக்குள் உணவு, மருந்து மற்றும் இதர மனிதாபிமான உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் தடுப்பதாக உதவிகள் செய்வதில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்