‘ரிமோட்’ கருவி தொடர்பான வாக்குவாதத்தில் தாயைக் கொன்ற மகன்

‘ரிமோட்’ கருவி தொடர்பான வாக்குவாதத்தில் தாயைக் கொன்ற மகன்

1 mins read
தந்தைக்கும் கத்திக்குத்துக் காயம்
5700bd74-2868-4e4a-8cfe-04a569968d3c
படம்: - டிவிபிஎஸ் காணொளி

தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ நாளில் சு எனும் அந்த ஆடவரும் அவரது 60 வயதுத் தாயாரும் கடைவீட்டின் இரண்டாம் தளத்தில் இருந்தனர்.

அன்றிரவு தொலைக்காட்சியின் தொலை இயக்கக் கருவி (ரிமோட்) வேலைசெய்யாததைக் கண்ட தாயார் மகனைக் கடிந்துகொண்டதை அடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் மூண்டதாகக் கூறப்பட்டது.

வார்த்தைகள் தடிக்கவே சினமுற்ற சு, பழங்களை நறுக்குவதற்கான 7 செ.மீ. நீளமுள்ள கத்தியால் மூதாட்டியைச் சரமாரியாகத் தாக்கியதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

அப்போது கீழ்த்தளத்தில் இருந்த சுவின் தந்தை, சத்தம் கேட்டு மேலே சென்றார். தன் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடக்கக் கண்ட அவர், மகனைத் தடுக்க முயன்றார்.

அதில் தந்தைக்குக் கைகளிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், சுவைக், காவல்துறையினர் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கிய சு, அதன் பிறகு அதிகம் வெளியில் செல்வதில்லை என்று அண்டைவீட்டினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்