வடகொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த சீனா விருப்பம்

வடகொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த சீனா விருப்பம்

1 mins read
325df10c-2ee6-43df-b3e8-db0b00f071c8
திரு சாவ் லெஜி (இடம்) அதிகாரத்துவ நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டு வடகொரியா சென்றுள்ளார். - படம்: இபிஏ

ஷென்சென்: சீனத் தலைமைத்துவம் வடகொரியாவுடன் இணைந்து நம்பிக்கையை ஆழப்படுத்தவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உயரிய தலைவர்களுள் ஒருவரான சாவ் லெஜி, பியோங்யாங்கில் ஆற்றிய உரையில் அவ்வாறு கூறியதாக ஏப்ரல் 12ஆம் தேதி சீனாவின் அரசாங்க ஊடகமான சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரு சாவ், ஏப்ரல் 11 முதல் 13ஆம் தேதி வரை, அதிகாரத்துவ நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டு வடகொரியா சென்றுள்ளார்.

சீன-வடகொரிய நட்பு ஆண்டின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றியதாக சின்ஹுவா தெரிவித்தது.

2018ஆம் ஆண்டுக்குப் பிறகு பியோங்யாங் சென்றுள்ள ஆக உயரிய சீனத் தலைவர் அவர்.

அண்மையில் இருதரப்புத் தலைவர்கள் ஐந்து முறை சந்தித்ததாகத் திரு சாவ் குறிப்பிட்டார்.

“அனைத்துலக நிலவரம் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தாலும், சீனாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பாரம்பரியமிக்க நட்புறவு, ஆழமாகவும் வலுவாகவும் நீடிக்கும்,” என்று அவர் தமது உரையில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவைத் தற்காத்து, மேம்படுத்தும் கொள்கையை பெய்ஜிங் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ, ஏப்ரல் 13ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு, நெருங்கிய நட்பு நாடான சீனாவுடன் அரசதந்திர உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முனைந்துள்ளது வடகொரியா.

குறிப்புச் சொற்கள்