தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்னி கடைத்தொகுதியில் அறுவரைக் குத்திக் கொன்ற ஆடவரைக் காவல்துறை சுட்டுக் கொன்றது

2 mins read
cb02d644-6515-45b1-bea7-6c02607d2a2e
வெஸ்ட்ஃபீல்ட் போண்டாய் ஜங்ஷன் கடைத்தொகுதியில் ஏப்ரல் 13ஆம் தேதி கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததை அடுத்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் அறுவரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவரைக் காவல்துறை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்ஃபீல்ட் போண்டாய் ஜங்ஷன் கடைத்தொகுதியில் ஒன்பது பேரைத் தாக்கிய அந்த ஆடவரை காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதாகவும் அதில் ஆடவர் மாண்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் ஆண்டனி குக் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாக்குதல்காரரின் நோக்கம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் கூறினார்.

“சனிக்கிழமையில் வழக்கமாகப் பொருள்வாங்கச் செல்லும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அச்சம் விளைவிக்கும் வன்செயல் இது,” என்றார் அவர்.

துப்பாக்கி, கத்தி தொடர்பில் ஆகக் கடுமையான சட்டங்கள் நடப்பில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அங்கு இத்தகைய தாக்குதல்கள் அரிதானவை என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2 மணி) அவசர உதவி வாகனங்கள் அந்தக் கடைத்தொகுதிக்கு அழைக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கூறியது.

கடுமையான காயங்களுடன் ஒரு குழந்தை உட்பட எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மருத்துவ உதவி வாகனச் சேவைப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சம்பவத்தை அடுத்து நூற்றுக்கணக்கானோர் அந்தக் கடைத்தொகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்பிய பாதுகாப்பு கேமராப் பதிவுகளில் ஆஸ்திரேலிய ரக்பி லீக் அங்கியை அணிந்த ஆடவர் ஒருவர் பெரிய கத்தியுடன் அந்தக் கடைத்தொகுதியில் ஓடுவதைக் காண முடிந்தது.

கடைத்தொகுதியில் பொருள் வாங்கக் கூடியிருந்தோர் பயத்தில் பாதுகாப்பான இடம் தேடி ஓடியதாகவும் காவல்துறையினர் அந்த வட்டாரத்தைப் பாதுகாக்க முனைந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

சிலர் கடைகளுக்குள் பாதுகாப்பு நாடிப் பதுங்கினர். அவர்களுள் ஒருவரான திருவாட்டி பிராஞ்சுல் பொக்காரியா, பலரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அழுததாகக் கூறினார்.

இரவுநேரமாகியும் காவல்துறை, மருத்துவ உதவி வாகனங்கள் அந்தக் கடைத்தொகுதி வளாகத்திற்கு அருகே தூக்குப் படுக்கைகளுடன் தயார்நிலையில் நிற்பதைக் காண முடிவதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறையின் எச்சரிக்கை ஒலியும் ஹெலிகாப்டர்கள் எழுப்பிய ஒலியும் அந்த வட்டாரத்தை நிறைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

வெஸ்ட்ஃபீல்ட் போண்டாய் ஜங்ஷன் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்