டேங்கர் லாரியுடன் கார் மோதி குழந்தையும் தாயும் உயிரிழப்பு

1 mins read
5484b62f-1317-4444-92da-0380dc9388fb
ஐவர் அடங்கிய குடும்பம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. - படம்: மலேசிய ஊடகம்

கோத்தா திங்கி: மூன்று மாதப் பெண் குழந்தையும் குழந்தையின் 28 வயது தாயாரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதி ஜோகூரின் ஜாலான் தஞ்சுங் பாலாவ் - பண்டார் பெனாவார் பகுதியில் நடந்துள்ளது.

காருடன் டேங்கர் லாரி மோதிக்கொண்ட விபத்து குறித்துத் தங்களுக்கு பிற்பகல் 1.38 மணிக்குத் தகவல் கிடைத்ததாக பெனாவார் தீயணைப்பு, மீட்புப் படையின் செயல்பாட்டுத் தளபதி அஸ்லான் மாட் சானி தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வாகனத்தில் பெண்ணும் அவரின் குழந்தையும் சிக்கி இருந்ததைக் கண்டனர்.

அவர்கள் காரின் முன்னிருக்கையில் பயணம் செய்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்களை காரிலிருந்து வெளியேற்றிய பின்னர் இருவரும் உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.

காரை ஓட்டிய 30 வயது ஆடவர், பெண்ணின் கணவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவருக்கும் விபத்தில் காயங்கள் ஏற்பட்டன.

எட்டு, ஐந்து வயதுடைய அவர்களின் மற்ற இரண்டு பிள்ளைகளும் விபத்தில் காயமுற்றனர்.

இதற்கிடையே, லாரியை ஓட்டிய 34 வயது ஆடவர் காயங்களின்றி தப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்