உக்ரேனுக்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்கவிருக்கும் பிரிட்டன்

2 mins read
79c9c79f-9f6f-46ee-a43a-798d140a7e46
ஜனவரி 12ஆம் தேதியன்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: உக்ரேனுக்கு பிரிட்டன் கூடுதல் ராணுவ உதவி வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் 500 மில்லியன் பவுண்டு (S$841 மில்லியன்) செலவழிக்கிறது.

இதுதொடர்பாக, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஏப்ரல் 23ஆம் தேதியன்று போலந்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தடுக்க, அதைத் தோற்கடிப்பது அவசியம் என்று திரு சுனக் தெரிவித்தார்.

பல மாதங்களுக்குப் பிறகு இதுவே திரு சுனக்கின் அதிகாரபூர்வப் பயணமாகும். போலந்துப் பிரதமர் டோனல்ட் டஸ்க்கை அவர் சந்தித்துப் பேச இருக்கிறார்.

உக்ரேனுக்கு பிரிட்டன் நீண்டகாலமாகவே ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் உக்ரேனுக்குப் பிரிட்டன் மொத்தம் 3 பில்லியன் பவுண்டு பெறுமானமுள்ள ராணுவ உதவி வழங்குகிறது.

“ உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபர் புட்டின் வெற்றி பெற்றால், உக்ரேனிய எல்லையுடன் அவர் நிறுத்திக்கொள்ள மாட்டார். உக்ரேனின் ஆயுதப் படைகள் தொடர்ந்து துணிவுடன் போரிட்டு வருகின்றன. இருப்பினும், எங்கள் ஆதரவு அவற்றுக்குத் தேவைப்படுகிறது. பிரிட்டன் வழங்கும் கூடுதல் நிதி அதை உறுதி செய்யும்,” என்று திரு சுனக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உக்ரேனுக்கு உதவியாக பிரிட்டன் பேரளவில் பல ஆயுதங்களையும் சாதனங்களையும் அனுப்பிவைக்கிறது. அவற்றில் அதிநவீன போர் ஆற்றல் கொண்ட 60 படகுகளும் அடங்கும்.

இதற்கிடையே, உக்ரேனுக்கு உதவி வழங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்