பேங்காக்கில் கொலை, உடல் பாகங்கள் துண்டிப்பு; ஜப்பானிய சந்தேக நபர்களுக்குத் தேடல்

2 mins read
1a4f0a96-a061-47b6-bf83-2d57d2b5c9f6
10 வயது சிறுவன் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களைக் கண்டார். - படம்: பிக்சாபே

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஜப்பானியர் இருவர், சக நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவ்விருவரும் ஜப்பானிய குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. தாய்லாந்து காவல்துறையினர் அவர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 33 வயது சுஸுக்கி ஹிரோத்தோ, 50 வயது காத்தோ தக்குயா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கைதாணையைப் பெற தாய்லாந்து காவல்துறை, அனைத்துலக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

யக்குஸா என்றழைக்கப்படும் ஜப்பானிய குண்டர் கும்பல் உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டது கொலை இடம்பெற்றதற்கான காரணமாக இருக்கலாம் என்று விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் கைகள், துண்டிக்கப்பட்ட உடல் பகுதி ஆகியவை கறுப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு பாங் புவா தோங் வட்டாரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சொய் சாவாங் 2 பகுதியில் போடப்பட்டிருந்ததை இம்மாதம் 19ஆம் தேதியன்று 10 வயது சிறுவன் ஒருவர் பார்த்தார். அதன் பின்னர் அந்தப் பகுதியில் தேடல் இடம்பெற்றது. அதில் பல கோரமான அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏப்ரல் 21 அன்று துண்டிக்கப்பட்ட உடல் இருந்த பகுதிக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் அப்பால் கோடரிகளையும் அரிவாள்களையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர். கபாலத்தின் துண்டுகள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டன.

அனைத்து உடல் பாகங்களும் 47 வயது ஜப்பானிய ஆடவரான காபா‌ஷிமா ரியோசுக்கே என்பவருடையதுதானா என்பதை உறுதிப்படுத்த அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டதென பேங்காக் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.

ஏப்ரல் 23ல் தாய்லாந்தைச் சேர்ந்த கிரிட்சார்க்கோர்ன் ஜாய்ஃபிட்டாக் எனும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பேங்காக்கின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் கிடங்கு ஒன்றுக்கு ஜப்பானிய ஆடவர்கள் மூவரை வாகனத்தில் அழைத்துச் சென்றதை பொம் என்றும் அழைக்கப்படும் 34 வயதாகும் அவர் ஒப்புக்கொண்டார்.

வாகனத்தில் முன்னிருக்கையில் இருந்தவர்களுக்கும் பின்னிருக்கையில் இருந்தவர்களுக்கும் இடையே மோசமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்