தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபா மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய இஸ்‌ரேல்

2 mins read
893a93a3-7ad5-4065-9f29-236c5fe2c860
ராஃபா மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக குறைந்தது மூன்று வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர். - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்நகரத்தில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு நிலம்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்‌ரேல் தெரிவித்துள்ளது.

ராஃபாவில் மில்லியன் கணக்கான பாலஸ்தீன அகதிகள் இருப்பதால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் உயிர்ச்சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்தும் இஸ்‌ரேல் விடுவதாக இல்லை.

ராஃபா நகரில் ஹமாஸ் படைகள் இருப்பதாகவும் அவற்றை அழித்தால் மட்டுமே போர் முடிவுக்கு வர சாத்தியம் உள்ளது என்றும் அது அடித்துக் கூறுகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதியன்று ராஃபா மீது இஸ்‌ரேல் ஐந்து முறை வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் அதன் விளைவாக குறைந்தது ஆறு பேர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாண்டோரில் பாலஸ்தீனச் செய்தியாளர் ஒருவரும் அடங்குவார் என்று ராஃபாவில் உள்ள மருத்துவப் பணியாளர்கள் கூறினர்.

தாக்குதல் காரணமாக குறைந்தது மூன்று வீடுகள் சேதமடைந்தன.

இதுவரை 34,305 பாலஸ்தீனர்களை இஸ்‌ரேல் கொன்று குவித்துள்ளதாக காஸா சுகாதாரப் பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 25ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

அத்துடன், தாக்குதல் காரணமாக காஸா நிலைகுலைந்து காணப்படுகிறது.

கட்டடங்கள் உட்பட பல உள்கட்டமைப்புகள் தரைமட்டாகிவிட்டன.

காஸாவைச் சேர்ந்த 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர். தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

போதுமான உணவு, தண்ணீர், மருத்துவ உதவி ஆகியவை இல்லாமல் மில்லியன்கணக்கானோர் அவதியுறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்