தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வு: பருவநிலை மாற்றத்தால் துபாய் வெள்ளம் மோசமானதாக இருந்தது

1 mins read
a33fc361-285e-489f-9887-a66d18dbaf7e
ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் ஓமானிலும் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 24 பேர் மாண்டனர். அவர்களில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

துபாய்: பருவநிலை மாற்றம் காரணமாக அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் ஓமானிலும் ஏற்பட்ட வெள்ளம் மிகவும் மோசமாக இருந்ததாக வானிலை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரிம வெளியேற்றம் காரணமாக துபாயிலும் ஓமானிலும் ஏற்பட்ட வெள்ளத்தின் தீவிரம் 10 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு வரை அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குப் பகுதியில் மிகக் கடுமையான கனமழை அவ்வப்போது ஏற்படுகிறது.

கடுமையான வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஓமானிலும் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் துல்லியமாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது, அதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், மிகக் கடுமையான வெள்ளத்தை எதிர்கொள்ள அந்நாடுகளில் போதுமான உள்கட்டமைப்பு இல்லை.

ஓமானியர்களில் 80 விழுக்காட்டினரும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் மக்களில் 85 விழுக்காட்டினரும் தாழ்வான நிலப்பகுதிகளில் வாழ்கின்றனர்.

இந்த நிலப்பகுதிகளில் மிக எளிதாக வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் கடல் மட்டம், மிகக் கடுமையான வானிலை ஆகியவற்றால் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் 90 விழுக்காட்டு உள்கட்டமைப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் ஓமானிலும் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 24 பேர் மாண்டனர். அவர்களில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்