அரசகுலத்தை அவமதித்தவருக்குக் கூடுதல் சிறைத்தண்டனை

1 mins read
0c9f49d9-596f-41bc-802e-382de3adb68c
அர்னோன் நம்ப்பா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தில் 2021ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் அர்னோன் நம்ப்பாவிற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசகுலத்தை அவமதித்ததன் தொடர்பில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதாகும் அர்னோனுக்கு ஈராண்டு 20 நாள்கள் சிறைத்தண்டனையுடன் 100 பாட் (S$2.70) அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசகுல அவமதிப்பு, நெருக்கடிநிலை அறிவிப்பை மீறியது, 2021ல் அரசியல் பேரணியில் உரையாற்றியது ஆகியவற்றுக்காக இத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக அர்னோனின் வழக்கறிஞர் கூறினார்.

தான் தவறேதும் செய்யவில்லை என்று அர்னோன் மறுத்துள்ளதாகக் கூறிய அவர், மேல்முறையீடு விண்ணப்பம் செய்யப்படும் என்று கூறினார்.

ஏற்கெனவே அர்னோனுக்கு அரசகுல அவமதிப்பு தொடர்பான இரண்டு குற்றங்களுக்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்திலிருந்து அவர் சிறையில் உள்ளார்.

அதைத் தொடர்ந்து அண்மையில் விதிக்கப்பட்ட தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், அர்னோன் மொத்தம் 10 ஆண்டுகள் 20 நாள்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.

தாய்லாந்துச் சட்டத்தின்கீழ், மன்னரை அவமதித்ததாக நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்