புத்ராஜெயா: பெர்லிஸ் முதல்வர் முகம்மது ஷுக்ரி ராம்லி, ஏப்ரல் 30ஆம் தேதியன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துத் திரும்பியுள்ளார்.
ஆணையம் நடத்தும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கக் கடப்பாடு கொண்டிருப்பதாகத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் முகம்மது ஷுக்ரி பதிவிட்டார்.
“வாக்குமூலம் அளித்துவிட்டேன். உண்மைத் தகவல்களை மட்டுமே நாடி, அவற்றைப் பகிர்வது மிகவும் முக்கியம். பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம்,” என்று முகம்மது ஷுக்ரி கூறினார்.
முகம்மது ஷுக்ரியின் மகன் பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்துப் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முகம்மது ஷுக்ரியிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற ஆணையம் அவரை அழைத்திருந்தது.
இதனை முன்னிட்டு 63 வயது முகம்மது ஷுக்ரி, ஏப்ரல் 30ஆம் தேதி காலை புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்றார்.
முகம்மது ஷுக்ரியின் மகன், பெர்லிஸ் மாநில மன்னர் சயீது சிராஜுதீன் புத்ரா ஹமாலுல்லாயிலுக்குக் குடிநீர் விநியோகம் செய்தது தொடர்பாகப் பொய்க் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து 600,000 ரிங்கிட் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆணையம் விசாரணை நடத்துகிறது.

