தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெட்டன்யாகு: ராஃபாவுக்குள் தாக்குதல் நடத்தப்படும்

2 mins read
819cf82e-16c6-48ca-a608-4f9fe1c14be3
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

டெல் அவிவ்: காஸாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் ராஃபா நகரினுள் முன்பே கூறியதைப் போல் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதியளித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 30) திரு நெட்டன்யாகு அவ்வாறு சூளுரைத்தார்.

தனது பிணைக் கைதிகளை விடுவிக்க வகைசெய்யும் போர் நிறுத்தப் பரிந்துரையை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிடம் முன்வைத்தது. அதற்கு ஹமாசின் பதில் எதுவாக இருந்தாலும் ராஃபாவினுள் தாக்குதல் நடத்தப்படும் என்று திரு நெட்டன்யாகு உறுதியாகக் கூறியுள்ளார்.

இரு தரப்பும் போர் நிறுத்தம் தொடர்பில் இணக்கம் காணும் என்ற நம்பிக்கை அண்மையில் கூடியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க எகிப்து மறுபடியும் முயற்சி எடுப்பதையடுத்து நம்பிக்கை அதிகரித்துள்ளது.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காண்பது தொடர்பில் என்ன நடந்தாலும் ராஃபாவில் எஞ்சியுள்ள ஹமாஸ் படையினரை அழிப்பதே இஸ்ரேலின் எண்ணம் என்று திரு நெட்டன்யாகு சொன்னார்.

“எங்களின் இலக்குகள் அனைத்தையும் அடையாமல் போரை நிறுத்துவதற்கான பேச்சுக்கு இடமில்லை,” என்று திரு நெட்டன்யாகு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். “ஒப்பந்தம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி போரில் வெற்றியடைய நாங்கள் ராஃபாவுக்குள் நுழைந்து அங்குள்ள ஹமாஸ் படைகளை ஒழிப்போம்,” என்றும் திரு நெட்டன்யாகு குறிப்பிட்டார்.

குறுகிய இடத்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட காஸா ஏற்கெனவே இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் சீர்குலைந்துபோய்விட்டது. போர் தொடங்கி ஏழு மாதம் நிறைவடையவுள்ள வேளையில், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணுமாறு அனைத்துலக அளவில் இருந்துவரும் நெருக்குதல் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்