ஜியாங்சு: சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள தைசோ விலங்கியல் தோட்டத்திற்கு மே 1ஆம் தேதி சென்ற பார்வையாளர்களைப் புதுவகை விலங்குகள் இரண்டு குழப்பத்தில் ஆழ்த்தின.
‘பாண்டா’ கரடிகளைப்போலவே காட்சியளிக்கும் அவற்றின் காணொளிகளைப் பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
உண்மையில், ‘சௌ சௌ’ இன நாய்களுக்குப் பாண்டா கரடிகளைப்போல் வண்ணம் பூசப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘பாண்டா நாய்கள்’ காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதியில், இது நாய் இனங்களில் ஒன்றன்று என்ற அறிவிப்புப் பலகையை விலங்கியல் தோட்ட நிர்வாகம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.
விலங்கியல் தோட்டத்துக்கான நுழைவுக் கட்டணத்திலேயே ‘பாண்டா நாய்’களைக் காண்பதற்கான கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
எது எப்படியோ, புதிய ‘பாண்டா நாய்களைக்’ காண கூட்டம் அலைமோதுவதாகத் தெரிகிறது. ஆயிரக்கணக்கானோர் அவற்றைக் காணச் சென்றாலும் நாய்களுக்கு இவ்வாறு சாயம் பூசுவது அவற்றைக் கொடுமைப்படுத்தும் செயல் என்று இணையவாசிகள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

