தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது: ஆஸ்திரேலியா கண்டனம்

2 mins read
4803612f-c03d-4efd-85c9-d6abe2fc6ccc
சம்பவம் தொடர்பாக சீனாவிடம் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய மக்கள் எதிர்பார்ப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.

மஞ்சள் கடல் பகுதியில் சீனப் போர் விமானம் மேற்கொண்ட பாதுகாப்பற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல், ஆஸ்திரேலிய ராணுவ ஹெலிகாப்டருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது என்று ஆஸ்திரேலியா மே 6 அன்று கூறியது.

மே 4ஆம் தேதி சீன விமானப்படையின் ஜே-10 ஜெட் விமானம், ஆஸ்திரேலிய எம்எச் 60ஆர் சீஹாக் ஹெலிகாப்டருக்கு மேலேயும், பல நூறு மீட்டர் முன்னதாகவும் ஒளிக்கற்றைகளை வீசியதாக ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறினார்.

வடகொரியாவிற்கு எதிரான பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அது இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இதற்கு பதிலளித்த சீனா, ஆஸ்திரேலிய விமானத்தை எச்சரிக்க அதன் ராணுவம் நடவடிக்கை எடுத்ததாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஆஸ்திரேலிய விமானம் வேண்டுமென்றே சீனாவின் வான்வெளியின் எல்லைக்கு நெருக்கமாக, “தூண்டிவிடும் நடவடிக்கையில்” ஈடுபட்டதாகவும் அது கடல்பகுதியின் வான் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் திரு லின் ஜியான் கூறினார். முன்னதாக, சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரதிநிதித்துவம் குறித்து சீனா இன்னும் பகிரங்கமாக பதிலளிக்கவில்லை என்று திரு ஆல்பனிஸ் தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.

“இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மிகவும் தெளிவாகவும் ஐயத்துக்கு இடமின்றியும் தெரிவிப்பதற்காகவே இந்த விவகாரத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளோம்,” என்று அவர் நைன்ஸ் டுடே ஷோவில் கூறினார்.

சீனப் பிரதமர் லீ சியாங், ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பேச்சுவார்த்தைகளின்போது எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்,” என்றார் திரு ஆல்பனீஸ்.

குறிப்புச் சொற்கள்