தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்க மாட்டார்: பைடன்

1 mins read
20fc4ea0-2531-4fb9-bbe2-994b80c7aa01
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் தோல்வியடைந்தால், அந்த முடிவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘சிஎன்என்’ செய்தி நிறுவனத்திற்கு மே 8ஆம் தேதி அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட்ட இருவரும் இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் அப்பதவிக்காகப் பலப்பரிட்சையில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் அமெரிக்க மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

“திரு டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவை ஏற்றுக்கொள்வார் என எண்ணுகிறீர்களா? நான் உறுதியாகக் கூறுகிறேன் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது இந்த மனப்போக்கு மிகவும் ஆபத்தானது,” என ‘சிஎன்என்’ செய்தி நிறுவனத்திடம் பைடன் கூறினார்.

“2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சட்டரீதியான பல நடவடிக்கையில் ஈடுபட்டார். மேலும், எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் தான் வெற்றிபெற்றதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்,” என அவர் திரு டிரம்ப்பின் மனப்போக்கை விமர்சித்தார்.

குறிப்புச் சொற்கள்