ஜெருசலம்: ஆயுதங்கள் தரவில்லை என்றாலும் இஸ்ரேலியர்கள் தனியாகப் போரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார்.
அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலியப் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளும் அவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பவர்களும் போரினால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் இருக்கும் ராஃபா பகுதியில் இருக்கின்றனர். அப்பகுதியில் வாழும் மில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் அவர்கள் கலந்துள்ளனர். அவர்களைக் கண்டறிய வேண்டும் என்றால் ராஃபாமீது பேரளவிலான தாக்குதலை நாங்கள் நடத்த வேண்டும் என இஸ்ரேல் நீண்ட காலமாக எச்சரிக்கை விடுத்து வந்தது.
அதனையடுத்து, அப்பகுதியில் வாழும் பொதுமக்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு நம்பகமான திட்டம் இல்லாத நிலையில், பேரளவிலான ரஃபா படையெடுப்பை ஆதரிக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்தது.
ஏழு மாதங்களாக நடந்துவரும் இந்தப் போரில் ரஃபாவை கைப்பற்றாமல் வெற்றி பெற முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
வான்வழி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் கொண்ட கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பாமல் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது என்ற செய்திகள் குறித்து நெட்டன்யாகு அரசாங்கம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆயுதங்களை நிறுத்தியதின் மூலம் ரஃபாவிற்குள் செல்ல வேண்டாம் என இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை (மே 8) கூறினார்.
“நாங்கள் தனியாக நிற்க வேண்டும் என்றால், நாங்கள் தனித்து நிற்போம்,” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதைக் குறிப்பிடாமல் திரு நெட்டன்யாகு தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையையும் மீறி காஸாமீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமையன்று (மே 10) தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் நடந்துவந்த நிலையில் அதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.