தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐநா: ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் மரணம்

1 mins read
9912aca4-eb9f-4729-bc8e-32956f03e60b
ஆப்கானிஸ்தானில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாகப் பலர் மாண்டதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. - படம்: ஏஎஃப்பி

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் மே 11ஆம் தேதி தெரிவித்தது.

பக்லான் மாநிலத்தில் இந்தப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சு அச்சம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 10ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாகவும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானதாகவும் ஐநா கூறியது.

பக்லானி ஜடிட் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,500 வீடுகள் தரைமட்டமாகின அல்லது சேதமடைந்தன.

அங்கு 100க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

மே 10ஆம் தேதி இரவு நிலவரப்படி 62 பேர் மாண்டதாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் கூறியது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகவும் வடக்குப் பகுதியில் உள்ள தக்கர் மாநிலத்தில் மே 11ஆம் தேதியன்று 20 பேர் மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் பலர் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகாலப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தற்காப்பு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்