தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் நெடுங்கால மனிதகுலப் பேரழிவு அபாயம்: ஐநா எச்சரிக்கை

2 mins read
222951cc-7402-49d0-915a-2070b3830b2a
ராஃபா நகரின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கிய வீடு ஒன்றின் இடிபாடுகளுக்கு இடையே துயரத்துடன் காணப்பட்ட பாலஸ்தீன சிறுவன். - படம்: ராய்ட்டர்ஸ்

ராஃபா: நீண்ட நெடுங்கால மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயத்தில் காஸா உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்து உள்ளார்.

காஸாவின் தென்தொலைவு நகரான ராஃபாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பது அங்கு நடந்து வரும் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடக்கூடியதாக உள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் கிழக்கு வட்டார நகரத்தை இஸ்ரேலின் தரைப்படைக் கைப்பற்றியது. எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான பாலஸ்தீனிய தரப்பின் ராஃபா எல்லையை அந்தப் படை தன்வசமாக்கியபோதிலும் அந்நகரின் கட்டடங்கள் நிறைந்த முக்கிய பகுதிக்குள் அது இன்னும் நுழையவில்லை.

இந்நிலையில், பீரங்கித் தாக்குதல் நடைபெற்ற நகரை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை (மே 10) பார்வையிட்டனர்.

இதற்கிடையே, நகரின் கிழக்குப் பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ராஃபா எல்லையும் காஸா வட்டாரமும் குறுக்கிடும் பகுதியில் தனது படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பல்வேறு பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டதாகவும் அது கூறியது.

இருப்பினும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதி அளித்தபடி முழு அளவிலான தாக்குதல் நடைபெற்றதற்கான அறிகுறி அங்கு காணப்படவில்லை.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை நீடித்தால் சில ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த புதன்கிழமை (மே 8) எச்சரித்து இருந்தார்.

வெள்ளிக்கிழமை (மே 10) தனது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்திய வாஷிங்டன் ராஃபா நகருக்கு எதிரான பெரும் நடவடிக்கை எதுவும் நிகழவில்லை என்று கூறியது.

இந்நிலையில், ராஃபா நகரைச் சுற்றிலும் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காஸா குடிமக்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் தெரிவித்து உள்ளன.

எரிபொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ராஃபா எல்லையை இஸ்ரேலியப் படைகள் கடந்த செவ்வாய்க்கிழமை மூடிவிட்டன. அதன் காரணமாக இருப்பில் உள்ள எரிபொருள் தீரும் நிலையில் உள்ளதால் காஸாவுக்குள் நடைபெற்று வரும் மனிதாபிமான உதவிகள் தடைபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அதன் எதிரொலியாக, மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதி முகாமில் தங்கி உள்ள மாலேக் அல்-ஸாஸா என்பவர் ஊடகங்களிடம் கூறுகையில், சாப்பிட உணவும் இல்லை குடிக்கத் தண்ணீரும் இல்லை என்றார்.

“எங்களை யாரும் கவனிப்பாரில்லை. கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மட்டுமே எங்களிடம் உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்