வாஷிங்டன்: அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காஸா போரில் பயன்படுத்தியதால் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேல் மீறியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் மே 10ஆம் தேதியன்று தெரிவித்தது.
இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுதொடர்பாக அது துல்லியமான புள்ளிவிவரங்களையோ தகவல்களையோ வெளியிடவில்லை.
காஸா போர் காரணமாக அங்கு பதற்றநிலை நிலவுவதாகவும் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்துத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
இந்தக் கண்டுபிடிப்புகளைக் கொண்ட 46 பக்க அறிக்கையை அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்தது.
இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு மேலும் கசந்திடக்கூடும் என்று கூறப்படுகிறது.
காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் பைடன் எவ்வளவு கூறியும் இஸ்ரேல் கேட்பதாக இல்லை.
ராஃபாவில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் பதுங்கியிருப்பதாகவும் அவர்களை வேரோடு அழித்தால் மட்டுமே இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் காஸாவெங்கும் உள்ள பல பகுதிகளில் தங்கள் உடைமைகள், அன்புக்குரியோரை இழந்த மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தஞ்சம் அடைந்திருப்பதை அமெரிக்கா சுட்டுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் அங்கு தாக்குதல் நடத்தினால் உயிர்ச்சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ராஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத் தயாராகி வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.
கடந்த ஏழு மாதங்களாக நடந்து வரும் காஸா போரில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக இதுவரை 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டனர்.