ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்பகுதியில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
ரியோ கிராண்டே டோ சூல் மாநிலத்தில் மேலும் 125 பேரைக் காணவில்லை என்று குடிமைத் தற்காப்பு அமைப்பு, மே 11ஆம் தேதி கூறியது.
புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் கிட்டத்தட்ட 537,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
ஏறத்தாழ 446 நகர்ப்புறங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2.1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவதியுறுகின்றனர்.
மேலும் கனமழை பெய்யும் என்று முன்னுரைத்துள்ள வானிலை ஆய்வகம், ஆறுகள் நிரம்பி வழியும் என்று கவலை தெரிவித்துள்ளது.
ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலின் தென் மாநிலம், புவியியல் அமைப்பு ரீதியாக அதிக மழைப்பொழிவைப் பெறும் இடமாக விளங்குகிறது.
பருவநிலை மாற்றத்தால் அந்த வட்டாரத்தில் மழைப்பொழிவு மேலும் கடுமையாகி வருவதாக பிரேசில் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

