ராஃபா: கூடுதலானோரை காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாபலியா, பெய்ட் லாஹியா ஆகியவற்றிலிருந்தும் வெளியேறுமாறு அங்குள்ள மக்களுக்கு உத்தரவிடப்பட்டது. காஸாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் வேளையில் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
கிழக்கு ஜாபலியாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) காலை இஸ்ரேல் டாங்கிகளை அனுப்பியதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன. குறைந்தது 19 பேர் மாண்டதாகவும் மேலும் பலர் காயமுற்றதாகவும் சுகாதார அதிகாரிகள் கூறினர்.
காஸாவின் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த எட்டு அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் ஜாபலியாவில் இருப்பதுதான் ஆகப் பெரியதாகும். ஜாபலியாவில் 100,000 பேருக்கு மேல் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் 1948 அரபு-இஸ்ரேல் போரின்போது தற்போது இஸ்ரேல் அமைந்துள்ள வட்டாரத்தில் இருக்கும் நகரங்களிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் துரத்தப்பட்டோரின் வம்சாவளியினர் ஆவர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் நூறாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் தஞ்சம் புகுந்துகொள்ள ராஃபாதான் எஞ்சியிருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்தும் வெளியேறவேண்டிய சூழல் நிலவுகிறது.
மேற்கு ராஃபா தங்கள் கண்முன் காலியாவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு சபைக் குழுவின் (யுஎன்ஆர்டபிள்யுஏ) பேச்சாளர் லூயிஸ் வாட்டர்பிரிட்ஜ் கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.
சனிக்கிழமை (மே 11) மாலை வட காஸாவின் சில பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சம் முழுவீச்சில் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டது.
வீடுகளிலிருந்து வெளியேறிய பொதுமக்களை கான் யூனிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மவாசி எனும் சிற்றூருக்கு இடம் மாறிக்கொள்ளுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஆனால், திரளாக வரும் மக்களைக் கையாள அப்பகுதியில் போதுமான வசதி கிடையாது என்று நிவாரண அமைப்புகள் சொல்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, எஞ்சியிருக்கும் ஹமாஸ் படையினரை ஒழிக்க ராஃபாவில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக இஸ்ரேல் எடுத்துரைத்து வருகிறது.
மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் மீண்டும் உத்தரவிட்டிருப்பது அனைத்துலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
“பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்லுமாறு ராஃபா மக்களை வற்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி அரசதந்திரியான ஜோசெப் பொரெல் அறிக்கை ஒன்றில் சொன்னார். இஸ்ரேலின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்ல்ஸ் மிச்செல்.
“சம்பந்தப்பட்ட பகுதிகள் பாதுகாப்பானவை என்று கூறப்படுவது உண்மையன்று. அது தவறான கண்ணோட்டத்தைத் தருவதாகும்,” என்று யுஎன்ஆர்டபிள்யுஏ தலைவர் ஃபிலிப்பே லாஸரினி குறிப்பிட்டார். சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெரும்பாலான காஸா மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும் அவர் சுட்டினார்.
ராஃபாவில் ஒரு ரொட்டிக் கடை மட்டுமே இயங்கிக்கொண்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்தது.