இந்தோனீசிய வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு

இந்தோனீசிய வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு

1 mins read
bfc45a31-1def-4ee7-92ff-b425f7f33942
காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. குறைந்தது 27 பேரைக் காணவில்லை; 37 பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 3,396 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மே 11ல் பல மணி நேரம் நீடித்த கனமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டதுடன் எரிமலையிலிருந்து பெரிய பாறைகள் கீழ்நோக்கி உருண்டன.

வெள்ளம் காரணமாக சாலைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் சேதமடைந்தன.

இந்நிலையில், காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர்.

கனமழையின்போது மராப்பி எரிமலையிலிருந்து எரிமலைக் குழம்பும் கற்களும் வழிந்தோடி, சாலை இணைப்புகளைத் துண்டித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்போருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வான்வழியாக அனுப்பிவைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

மே 13ஆம் தேதியன்று பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் ஏறத்தாழ 71 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 125 வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்