தோஹா: ஹமாஸ் அமைப்புக்கான மலேசியாவின் ஆதரவைப் புதுப்பிப்பதாக ஹமாஸ் குழுவுடனான மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அண்மைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவினால் தீவிரவாதக் குழு என வகைப்படுத்தப்பட்டுள்ள ஹமாஸ் குழுவினரைக் கத்தார் பயணத்தின்போது திரு அன்வார் சந்தித்தார்.
பிணைக்கைதிகளை விடுவிக்கவும், அரபு நாடுகளால் முன்வைக்கப்பட்ட அமைதித் திட்டத்தை ஏற்கவும் ஹமாஸ் முன்வந்திருப்பதற்கு செவ்வாய்க்கிழமை (மே 14) ஃபேஸ்புக் பதிவின்மூலம் திரு அன்வார் மலேசியாவின் நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், கைதிகளை விடுவித்தும், அமைதித் திட்டத்திற்கு உடன்படவும் இஸ்ரேலை அவர் கேட்டுக்கொண்டார்.
ராஃபா மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துலக அளவில் மலேசியா தனது பங்கை ஆற்ற உறுதியுடன் இருக்கும் என்று திரு அன்வார் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவில் பாலஸ்தீனப் பிரச்சினையின் உறுதியான ஆதரவாளராக திரு அன்வார் உள்ளார்.
ஹமாஸ் அமைப்புடன் மலேசியத் தலைவர்களின் நட்புறவானது நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமெரிக்காவிற்கு எதிராகவும், இஸ்ரேலுக்கான மேற்கத்திய உலக நாடுகளின் ஆதரவிற்கும் எதிராகவும் உள்நாட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் பங்கேற்பதுண்டு.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கியதாகக் குறிப்பிட்ட திரு அன்வார், திரு ஹனியே குடும்பத்தின் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு அன்வாருக்கு காஸா, ராஃபாவின் அண்மைய நிலவரம் குறித்து விவரிக்கப்பட்டது.