வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில், குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நியூயார்க் நீதிமன்ற அறைக்குப் படையெடுத்துள்ளனர்.
வழக்கில் டிரம்ப் தரப்பு கூறும் வாதங்களை வலியுறுத்துவது இவர்கள் நோக்கம். திரு டிரம்ப் சாட்சியங்களைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் டிரம்ப் எதிர்ப்பாளர்களைத் தாக்கிப் பேசுவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசு அதிகாரிகள் என, திரு டிரம்ப் வெற்றிபெற்றால் அவரது நிர்வாகத்தில் பதவிகளைப் பெற குறிவைத்துள்ள இவர்கள், விசாரணை நியாயமாக நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மே 14ஆம் தேதி, நீதிமன்றத்திற்கு அருகே பேசிய அமெரிக்க நாடாளுமன்றக் கீழவை நாயகர் மைக் ஜான்சன், நீதிமன்ற அமைப்பு திரு டிரம்ப்பிற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.
மூத்த நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் குற்றவியல் வழக்கு விசாரணையின்போது இவ்வாறு நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது அமெரிக்காவில் அரிது என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
திரு ஜான்சன் பேசிய விதம் தாமே பாதிக்கப்பட்டவரைப்போல இருந்தது என்று அவர்கள் கூறினர்.
“இத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் வழிநடத்துகிறீர்களா?” என்று செய்தியாளர்கள் திரு டிரம்ப்பிடம் கேட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதிலளித்த அவர், “எனக்காகப் பலரும் அழகாகக் குரல் கொடுக்கின்றனர். வாஷிங்டனிலிருந்து வந்துள்ள, மரியாதைக்குரிய இத்தகையோர், இதுவரை தாங்கள் பார்த்த ஆக மோசமான ஊழல் இது என்று கருதுகின்றனர்,” என்றார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தாம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை மறைக்க 77 வயது டிரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு 130,000 அமெரிக்க டாலர் (S$176,000) பணம் தந்ததாகக் கூறப்படும் வழக்கை எதிர்கொள்கிறார்.

