பெய்ஜிங்: சீன அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற விண்வெளி நிறுவனமான ‘சிஏஎஸ் ஸ்பேஸ்’ தனது முதல் விண்வெளி சுற்றுலா வாகனத்தை 2027ஆம் ஆண்டு விண்ணில் பாய்ச்சும் என அந்நாட்டு அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை (மே 17) தெரிவித்தது.
மேலும், 2028ஆம் ஆண்டு அந்த வாகனம் விண்வெளியின் விளிம்பு வரை பயணிக்கும் என்று அது கூறியது.
அமெரிக்கப் பில்லியனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ‘ப்ளூ ஆரிஜின்’ மே 19ஆம் தேதி முதல் தனது ‘நியூ ஷெப்பர்ட்’ உந்துகணையில் சரக்குகள், மனிதர்கள் ஆகியவற்றுடன் விண்வெளியின் விளிம்பு வரை மீண்டும் பயணிக்கும் என அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பு வெளிவந்த சில நாள்களுக்குப் பிறகு ‘சிஏஎஸ் ஸ்பேஸ்’ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
தனது வாகனத்தில் நான்கு அகலப்பரப்புள்ள ஜன்னல்கள் கொண்ட ஒரு சுற்றுலா அறை இருக்கும் என்றும் ஒரு விமானத்தில் ஏழு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் ‘சிஏஎஸ் ஸ்பேஸ்’ நிறுவனம் கூறியது.
இப்பயணத்திற்குப் பயணிகள் செலுத்த வேண்டிய கட்டணம் ஆளுக்கு 2 மில்லியன் யுவான் (S$373,000) முதல் 3 மில்லியன் யுவான் எனச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.


