முதல் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டது

2 mins read
e2088b1a-1f7f-4b49-8287-8a2f1a8888f4
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. - படம்: புளூம்பெர்க்

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியப் பொருளியல், முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் விரைவாக வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் செலவும் ஏற்றுமதிகளும் அதிகரித்தது இதற்குக் காரணம்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.2 விழுக்காடு விரைவாக வளர்ச்சி கண்டதாக மலேசிய மத்திய வங்கியும் புள்ளிவிவரத் துறையும் மே 17ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

முன்னர் அது 3.9 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் கருத்தாய்வில் முன்னுரைக்கப்பட்டிருந்தது. காலாண்டு அடிப்படையில் மலேசியப் பொருளியல் முந்தைய காலாண்டைவிட 1.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

சேவை, உற்பத்தித் துறைகள் வலுவடைந்தது இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வேளாண்மை, கட்டுமானம் ஆகிய துறைகள் ஒட்டுமொத்தப் பொருளியல் வளர்ச்சிக்குத் துணை நின்றன.

நாட்டின் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மலேசிய மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் கூறினார்.

பயனீட்டாளர் செலவிடும் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், அதிகரிக்கும் வருவாய், நிறுவனங்களின் நிதி நிலை வலுவடைதல், அரசாங்கத்தின் ஆதரவு ஆகியவை இதற்குக் கைகொடுக்கும் என்றார்.

ஆகப் பெரிய வர்த்தக பங்காளியான சீனாவின் நீடித்த நிலைத்தன்மை மிக்க பொருளியல் மீட்சி, மலேசியாவின் உற்பத்தித் துறைக்கும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் உதவக்கூடும். இந்த ஆண்டு மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு முதல் ஐந்து விழுக்காடு வரை விரிவுகாணும் என்று மத்திய வங்கியான பேங்க் நெகரா மலேசியா எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்