‘தைவானின் புதிய அதிபர் சீனாவுடனான உறவில் நிலையான அணுகுமுறைக்கு உறுதிகூறுவார்’

‘தைவானின் புதிய அதிபர் சீனாவுடனான உறவில் நிலையான அணுகுமுறைக்கு உறுதிகூறுவார்’

2 mins read
aaff322e-fd9f-4adc-8689-b981ecd6a6b4
திரு லாய் சிங் டே. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டே, சீனாவுடனான உறவில் நிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உறுதிகூறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மே 20ஆம் தேதி அவர் தமது பதவியேற்பு உரையை ஆற்றுவார். அப்போது திரு லாய் நாட்டின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க உறுதியளிப்பார் என்று பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரியாகப் பதவியேற்கவிருக்கும் ஒருவர் கூறினார். அந்த அதிகாரி தமது பெயரை வெளியிட விரும்பவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

கடந்த நாலாண்டுகாலம் அதிபர் சாய் இங் வென்னின் நிர்வாகத்தில் துணை அதிபராகப் பதவி வகித்த திரு லாய், தைவானின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

பொறுப்பேற்ற பிறகு அவர் சீனாவின் அதிகரிக்கும் நெருக்குதலைச் சமாளிக்க வேண்டியிருக்கும். தைவானிய வான்வெளிக்கு அருகே சீனா கிட்டத்தட்ட அன்றாடம் திடீர் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று பெய்ஜிங் கூறிவந்தாலும் தைப்பே அதை நிராகரித்துவருகிறது.

தைவானின் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் 64 வயது லாய், சீனாவுடன் பேச்சு நடத்தப் பலமுறை முன்வந்தபோதும் பெய்ஜிங் அவரது கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.

அதுமட்டுமன்றி, தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தித் தைவானைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை மறுப்பதற்கில்லை என்றும் சீனா கூறிவருகிறது.

திரு லாயும் அவரது ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியினரும், தைவானின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தைவானிய மக்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், ராய்ட்டர்சிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி, “அதிபர் சாயின் அடிப்படைக் கொள்கைகளைத் தொடர்வோம். அவற்றை அடியொற்றி எங்கள் நீடித்த, நிலையான அணுகுமுறை குறித்து விளக்குவோம்,” என்று கூறினார்.

“உலகப் பொருளியலிலும் புவிசார் அரசியலிலும் தைவான் முக்கியப் பங்கு வகிப்பதை உறுதிசெய்வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூடுதலான சினமூட்டும் ராணுவ நடவடிக்கைகளைச் சீனா மேற்கொள்ளும் நிலையில், புதிய அரசாங்கம் தைவானிலும் உலக அரங்கிலும் சிக்கலான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

இருதரப்புப் பரிமாற்றத்துக்கான வாய்ப்புகளைச் சிதைப்பதும் அனைத்துலக ஒழுங்கைச் சீர்குலைப்பதும் சீனத் தரப்பே என்று அனைத்துலகச் சமூகத்திற்குத் தெளிவுபடுத்தும் முயற்சியைத் தொடரவும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்