‘நீதித் துறை, மத்தியப் புலனாய்வுப் பிரிவைக் கட்டுப்படுத்த டிரம்ப் எண்ணம் கொண்டுள்ளார்’

1 mins read
885402a9-d78d-407c-8da8-9d801fd48a1f
மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கட்டுப்படத்த முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பங்காளிகள் பரிந்துரைகளை வரைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் மூலம் திரு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் அந்நாட்டின் நீதித் துறையை பழமைவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் ஒன்பது பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதுபற்றித் தெரியப்படுத்தினர்.

டிரம்ப் மீண்டும் அதிபராகி வெற்றிகரமாக இம்மாற்றைத்தைக் கொண்டுவந்தால் அது அவரின் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாக அமையும். ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பது, சட்டத்தை நிலைநாட்டுவது ஆகியவற்றில் நீதித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

நீதித் துறை தம்மீது சுமத்தியுள்ள பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திரு டிரம்ப், நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் நீதித் துறையை பெரிய அளவில் மாற்றியமைக்கப்போவதாக பிரசாரத்தின்போது உறுதியளித்தார்.

அதேபோல் திரு டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு (எஃப்பிஐ) இருக்கும் அதிகாரமும் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐ, தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் கருத்தாகும்.

எஃப்பிஐயின் பல பொறுப்புகள் மற்ற சட்ட ஒழுங்கு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படலாம் என்று ராய்ட்டர்சுக்குத் தகவல் கொடுத்த அந்த ஒன்பது பேர் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்