விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்க தாய்லாந்து திட்டம்

விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்க தாய்லாந்து திட்டம்

1 mins read
ece87d0c-73bc-486c-b309-17c91dc62237
தாய்லாந்து விமான நிலையங்களை ஆண்டுக்கு 180 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனுக்கு உயர்த்தத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. - படம்: பிக்சபே

பேங்காக்: வட்டாரத்தின் விமானப் போக்குவரத்து மையமாக தாய்லாந்தை உருவாக்க மூன்று கட்டத் திட்டத்தை அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் வரைந்து உள்ளது.

தாய்லாந்துக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை 2037ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 270 மில்லியன் என்று உயர்த்துவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தலைசிறந்த ஐந்து விமானத் தளவாட நாடுகளில் ஒன்றாக இடம்பெறவும் தாய்லாந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தாய்லாந்தை மிளிரச் செய்ய பிப்ரவரி மாதம் அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதி இந்த விமானப் போக்குவரத்துத் திட்டங்கள் என்று ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் சுற்றுப் பயணம், மருத்துவ சிகிச்சை, உணவு, விமானப் போக்குவரத்து, தளவாடங்கள், மின்சார வாகனங்கள், மின்னிலக்கப் பொருளியல், நிதி ஆகியவற்றுக்கான மையமாக தாய்லாந்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது அந்த அறிவிப்பு.

மூன்று கட்ட விமானப் போக்குவரத்து திட்டத்தின்கீழ் தாய்லாந்தின் விமான நிலையங்கள், ஆண்டுக்கு 1.2 மில்லியன் விமானச் சேவைகளையும் 180 மில்லியன் பயணிகளையும் கையாளும் திறனுக்கு அடுத்த ஆண்டுக்குள் உயர்த்தப்படும். இது குறுகிய காலத் திட்டம்.

அனைத்துலக விமானத் தொடர்புகளை இணைக்கும் குறைந்தபட்ச நேரத்தை 75 நிமிடங்களுக்கு மிகாத வகையில் அமைப்பது ஆணையத்தின் நீண்டகாலத் திட்டம்.

குறிப்புச் சொற்கள்