உலு திராம்: மலேசிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துப் பயில்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்நாட்டுக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாணவர்கள் அரசாங்கப் பள்ளிகளில் படித்தாலோ அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயின்றாலோ அவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தவறான, முறையற்ற கற்பித்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மலேசிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பள்ளிகளில் கல்வி பயிலாத ஆடவர் ஒருவர் மே 17ஆம் தேதியன்று ஜோகூர் மாநிலம், உலு திராமில் உள்ள காவல்துறையில் தாக்குதல் நடத்தி இரண்டு காவல்துறை அதிகாரிகளைக் கொன்றார்.
மலேசியாவில் தொடக்கநிலைக் கல்வி கட்டாயம் என்பதால் வீட்டிலிருந்து கல்வி கற்கும் சிறுவர்களும் மாவட்ட கல்வி அலுவலகங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.