கெய்ரோ: சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது சல்மானும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லவனும் ஞாயிறன்று (மே 19) சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் இருவரும் பரந்த அளவிலான இரு நாட்டு உறவுகள், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக சவூதி அரேபிய தேசிய செய்தித் தகவல் குறிப்பு கூறுகிறது.
இந்தச் சந்திப்பு சவூதி அரேபிய நகரான தெஹ்ரானில் இடம்பெற்றது. அதில் இருநாடுகளுக்கு இடையிலான, கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்றுள்ள, நகல் உத்திபூர்வ ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டதாக அந்த செய்தித் தகவல் தெரிவித்தது.
இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் பிரச்சினையில் ‘இரு நாட்டு தீர்வு’ காண்பதில் சரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது பற்றி சவூதி அரேபியத் தலைவரும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் விவாதித்தனர். அத்துடன், போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருள்களை காஸாவுக்குள் அனுமதிப்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதாக சவூதி அரேபிய செய்தி அறிக்கை தெரிவித்தது.