தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்கானிஸ்தானில் கரைபுரண்டோடிய வெள்ளம்; 47 பேர் மரணம்

2 mins read
f262cad8-ae77-4385-a423-9938a00ea06e
ஆப்கானிஸ்தானில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை, கரைபுரண்டோடிய வெள்ளம் காரணமாக குறைந்தது 47 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் மே 19ஆம் தேதியன்று தெரிவித்தார்.

குறைந்தது 300 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஃபார்யாப் மாநிலத்தின் தகவல் துறைத் தலைவர் திரு ஷம்சுதீன் முகம்மதி கூறினார்.

மே 18ஆம் தேதியன்று கோர் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இயற்கைப் பேரிடரால் அதிகம் பாதிப்படையும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று.

பருவநிலை மாற்றம் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறுகிறது.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் கனமழை பொழிந்ததில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

குறைந்தது 315 பேர் மாண்டதுடன் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மே 19ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோர் மாநிலத்தில் ஆற்றில் விழுந்து மாண்டவர்களின் சடலங்களை மீட்க அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாக ஆப்கானிஸ்தான் தற்காப்பு அமைச்சு கூறியது.

இதில் ஒருவர் மாண்டதாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது.

வெளிநாட்டுப் படைகள் அங்கிருந்து வெளியேறின.

பெண்களுக்கு எதிராக தலிபான் நடைமுறைப்படுத்தியுள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுபோன்று பல கடுமையான கொள்கைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள தலிபான் அரசாங்கத்துடன் பல நாடுகள் நட்புறவு கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்நாட்டின் வளர்ச்சிக்காக நிதியுதவி வழங்குவதை பல நாடுகள் நிறுத்திக்கொண்டன. உலக நாடுகள் வழங்கிய நிதி கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக பேரிடர் போன்றவற்றால் அந்நாடு அவதியுறும்போது போதுமான உதவி அந்நாட்டு மக்களைச் சென்றடைவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்