மிரட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும்: தைவானிய அதிபர்

மிரட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும்: தைவானிய அதிபர்

2 mins read
902065ca-9124-4b22-95fb-88278edb36b7
பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தைவானிய அதிபர் லாய் சிங்-டே. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

தைப்பே: சீனா அதன் ராணுவ, அரசியல் மிரட்டல்களை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனத் தைவானின் புதிய அதிபர் லாய் சிங்-டே கூறியுள்ளார்.

மே 20ஆம் தேதி ஆற்றிய பதவியேற்பு உரையில், அமைதிதான் ஒரே தீர்வு என்று கூறிய திரு லாய், தைவானிய மக்களின் தெரிவுக்கு பெய்ஜிங் மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சீனாவுடன் பேச்சு நடத்த அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

“தைவான் நீரிணைப் பகுதியிலும் இந்த வட்டாரத்திலும் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றைக் கட்டிக்காப்பதில் தைவானுடன் இணைந்து பணியாற்றுதல், உலகில் போர் குறித்த அச்சம் இல்லாத நிலையை உறுதிசெய்தல் எனும் அனைத்துலகப் பொறுப்புகளைச் சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“மேலும் உலகிற்கு நாம் உரக்கச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை தொடர்பில் தைவான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. அமைதிதான் ஒரே தீர்வு. வளப்பம்தான் நீண்டகால அமைதிக்கும் நிலைத்தன்மைக்குமான நமது இலக்கு,” என்று திரு லாய் குறிப்பிட்டார்.

சீனா இதற்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. ஜனவரி மாதம் தேர்தலில் போட்டியிட்டபோதே திரு லாய் பிரிவினைவாதி என்று கூறிய பெய்ஜிங், அவரால் போர் மூளும் அபாயம் இருப்பதாகக் கூறிவந்தது.

தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்றும் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி அதைச் சீனாவுடன் இணைப்பதை மறுப்பதற்கில்லை என்றும் பெய்ஜிங் சொல்கிறது.

இந்நிலையில் திரு லாய் தமது உரையில், அமைதியை ஆதரித்தபோதும் மாயைக்கு இடம்தரக் கூடாது என்று தைவானியக் குடிமக்களிடம் வலியுறுத்தினார்.

சீனாவின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நமது இறையாண்மையை விட்டுக்கொடுத்தாலும் தைவானைக் கவர்ந்துகொள்ளும் சீனாவின் எண்ணம் மாறாது என்பதைத் தைவானியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்