சிட்னியில் குடும்ப வன்முறைக்கு எதிரான நடவடிக்கையில் 554 பேர் கைது

சிட்னியில் குடும்ப வன்முறைக்கு எதிரான நடவடிக்கையில் 554 பேர் கைது

2 mins read
c5d97329-dabd-43fc-8156-6d934065edbc
சிட்னியில் இடம்பெற்று வரும் பெண்கள் மீதான தொடர்ச்சியான கடுமையான தாக்குதல்கள், பாலின அடிப்படையிலான, குடும்ப வன்முறையில் கவனம் செலுத்தத் தூண்டியுள்ளன. - படம்: பிக்சாபே

சிட்னி: சிட்னியில் குடும்ப வன்முறை தொடர்பான சந்தேகத்தின்பேரில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை திங்கட்கிழமை (மே 20) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான சிட்னியில் பெண்கள் மீதான கடுமையான தாக்குதல்கள் தொடர்வதை அடுத்து, காவல்துறை மேற்கொண்ட நான்குநாள் அதிரடி நடவடிக்கையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பெண்ணைக் குத்தி, விலா எலும்புகளில் முறிவு, முகத்தில் காயங்கள், சிறுநீரகத்தில் காயம் ஏற்படுத்தியதாக நம்பப்படும் ஓர் ஆடவர் உட்பட மாநிலத்தின் “மிக மோசமான குடும்ப வன்முறைக் குற்றவாளிகள்” சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கூறியது.

வன்முறைத் தாக்குதல்களால் 2024ல் 28 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நான்கு நாள்களுக்கு ஒரு மரணம் ஏற்படுகிறது. 2023ன் இதே காலகட்டத்தில் 14 பெண்கள் உயிரிழந்தனர்.

பெண்கள் மீதான தாக்குதலை ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் “தேசிய நெருக்கடி” என்று அழைத்துள்ளார். போலியான (டீப்ஃபேக்) ஆபாசப் படங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், துன்புறுத்தல் நிறைந்த உறவுகளிலிருந்து மீளும் பெண்களுக்கான நிதியுதவியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

நெருக்கமான துணையினால் செய்யப்படும் கொலைகள் கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்துள்ளன என்று ஆஸ்திரேலிய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 தரவுகளின்படி, ஆஸ்திரேலிய குடும்ப வன்முறை விகிதம் ஓஇசிடி சராசரியைவிடக் குறைவாகவே உள்ளது. கனடா, அமெரிக்கா, பிரிட்டனைவிட குறைவு. எனினும், குடும்ப வன்முறையைத் தடுக்கும் சேவைகள், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்