பேங்காக்: தாய்லாந்து பொருளியல் எதிர்பார்ப்புகளை மீறி வளர்ச்சி கண்டாலும் வளர்ச்சியின் வேகம் மெதுவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான காலாண்டில் சுற்றுப் பயணத் துறையும் தனியார் நுகர்வுத் துறைகளும் வளர்ச்சி கண்டன. இது அந்நாட்டு மத்திய வங்கி மீதான அழுத்தத்தைக் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆண்டு அடிப்படையில் அந்தக் காலாண்டில் தாய்லாந்து பொருளியல் 1.5 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக அந்நாட்டின் தேசிய பொருளியல், சமூக வளர்ச்சி மன்றம் திங்கட்கிழமை (மே 20) தெரிவித்தது.
கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பதிவான 1.7 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் இந்தக் காலாண்டு வளர்ச்சி குறைவு என்றபோதிலும் புளூம்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்ட 0.8 விழுக்காட்டு வளர்ச்சி என்பதைக் காட்டிலும் அதிகம்.
அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் மட்டும் வளர்ச்சி விகிதத்தைச் சரியாகக் கணித்திருந்தார். மற்றவர்கள், பெருந்தொற்றின் இறுதிக் காலத்திற்குப் பின்னர் ஆக மெதுவான வளர்ச்சியை தாய்லாந்து பொருளியல் எட்டும் என்று கூறி இருந்தனர்.
காலாண்டு அடிப்படையிலான வளர்ச்சி 0.6 விழுக்காடாக இருக்கும் என்று இடைநிலை மதிப்பீட்டில் கணிக்கப்பட்டபோதிலும் அதனையும் மீறி 1.1 விழுக்காடு வளர்ச்சி பதிவாகி உள்ளது.
2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 விழுக்காடு சுருங்கியது.

