புத்ராஜெயா: ஜோகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மாண்டனர். தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, மே 19ஆம் தேதியன்று பினாங்கில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க ஆடவர் ஒருவர் முயன்றார். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆயுதத்தைப் பறிக்க முயன்றவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 18ஆம் தேதியன்று தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனைக்குள் அத்துமீறி நுழைய ஆடவர்கள் இருவர் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களது காரில் ஆயுதம் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தேசிய அரண்மனை மலேசிய மாமன்னரின் அதிகாரபூர்வப் பிரதான அரண்மனை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று சம்பவங்களும் தனித் தனியாக நடத்தப்பட்டவையா அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையா என்பதைக் கண்டறிய மலேசியக் காவல்துறை விசாரணை நடத்துவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
இத்தகைய விவகாரங்களை மலேசியக் காவல்துறை மிகக் கடுமையாகக் கருதுவதாக திரு சைஃபுதீன் தெரிவித்தார்.

