லண்டன்: பிரிட்டனில் தேர்தல் பிரசாரம் மே 23ஆம் தேதி தொடங்குகிறது.
ஜூலை 4ஆம் தேதியன்று வாக்களிப்பு நடைபெறும் என்று மே 22ஆம் தேதியன்று திரு சுனக் அறிவித்திருந்தார்.
பணவீக்கம் குறைந்ததை அடுத்து, அவர் தேர்தல் குறித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கருத்துக் கணிப்பில் தொழிலாளர் கட்சியைவிட பிரதமர் சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 20 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் தொழிலாளர் கட்சித் தலைவரான திரு கியர் ஸ்டாமரும் பிரிட்டிஷ் வாக்காளர்களின் ஆதரவைப் பெற தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இரு கட்சித் தலைவர்களும் வாக்காளர்களை நேரில் சந்தித்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவர்கள் வகுத்துள்ள திட்டங்களைப் பற்றி பேசுவர் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றி ஜூலை 5ல் அரசாங்கம் அமைக்க இருவரும் இலக்கு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் வளர்ச்சிக்காகத் தாம் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் பலனளித்து வருவதாக 44 வயது திரு சுனக் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமது தலைமையின்கீழ் பிரிட்டனின் பொருளியல் மீண்டு வரும் என்றும் அனைத்துத் தரப்பினரும் பலனடைவர் என்றும் அவர் உறுதி அளித்தார்.
வழக்கறிஞரான 61 வயது திரு ஸ்டாமர், பிரிட்டனில் மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாக சூளுரைத்துள்ளார்.
“பிரிட்டனில் நிலவும் பெருங்குழப்பம், மக்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தொழிலாளர் கட்சி முடிவுக்குக் கொண்டு வரும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.