தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா போர் நிறுத்தம்: சமரசம் செய்வதிலிருந்து எகிப்து விலகக்கூடும்

2 mins read
8e0d5836-f784-4660-af64-658aeb03395f
ராஃபா நகரில் சேதமடைந்த காரில் விளையாடும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் சமரசம் செய்வதிலிருந்து தாம் விலகிக்கொள்ளக்கூடும் என்று எகிப்து கூறியுள்ளது.

அண்மையில் வரையப்பட்ட போர் நிறுத்தப் பரிந்துரையின் அம்சங்களை எகிப்தின் உளவுத்துறை மாற்றியதாகவும் அந்நடவடிக்கை, ஒப்பந்தம் எட்டப்படுவதில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் சிஎன்என் ஊடகம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து எகிப்து இவ்வாறு அறிவித்துள்ளது.

“சமரசப் பேச்சுவார்த்தையில் எகிப்தின் முயற்சிகளைக் கேள்விக்குறியாக ஆக்குவது காஸாவிலும் ஒட்டுமொத்த வட்டாரத்திலும் நிலவரத்தை மேலும் மோசமடையச் செய்யும்; அது, தொடரும் பூசலில் சமரசம் செய்வதிலிருந்து எகிப்தை முழுமையாகப் பின்வாங்கும் கட்டாயத்துக்குத் தள்ளக்கூடும்,” என்று எகிப்து அரசாங்கத் தகவல் சேவையின் தலைவர் டியா ரா‌ஷ்வான் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மே மாதத் தொடக்கத்தில் வரையப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அம்சங்களை எகிப்தின் உளவுத்துறை மாற்றியதாக சிஎன்என் செவ்வாய்க்கிழமையன்று (மே 21) தெரிவித்தது.

இதுகுறித்து விவரம் தெரிந்த மூவர் இத்தகவலை வெளியிட்டதாக சிஎன்என் சொன்னது.

அந்த ஒப்பந்தத்தைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாக மே ஆறாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. ஆனால் அந்த ஒப்பந்தம், அமெரிக்கா, கத்தார் ஆகியவற்றைச் சேர்ந்த சக சமரசப் பேச்சாளர்கள் ஹமாசிடம் முன்வைத்த ஒப்பந்தம் அல்ல என்று சிஎன்என் கூறியது.

எகிப்து உளவுத்துறை செய்ததாகக் கூறப்படும் மாற்றங்கள் அமெரிக்க, இஸ்ரேலிய, கத்தார் அதிகாரிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று சிஎன்என் செய்தி வெளியிட்டது.

சமரசப் பேச்சுவார்த்தை, அமெரிக்க மத்திய உளவுத்துறைப் பிரிவின் இயக்குநரான வில்லியம் பர்ன்ஸ் என்பவரின் தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்த விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து கேட்டுக்கொண்டதாலேயே சமரசப் பேச்சுவார்த்தையில் கெய்ரோ பங்கேற்றதாக திரு ரா‌ஷ்வான் அறிக்கையில் குறிப்பிட்டார். எகிப்து, கத்தாரின் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவதாக எகிப்து சாடியுள்ளது.

காஸா பகுதியின் தெற்குப் பகுதியில் எகிப்து எல்லைக்கு அருகே உள்ள ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதனைத் தொடர்ந்து எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றநிலை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்