ஹனோய்: வியட்னாமியத் தலைநகர் ஹனோயின் மத்திய வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை (மே 24) மூண்ட தீயில் 14 பேர் மாண்டனர்.
மேலும் மூவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 12.30 மணியளவில் பெருந்தீ மூண்டதை அடுத்து, சிலமுறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக வியட்னாம் செய்தி நிறுவனம் (விஎன்ஏ) கூறியிருந்தது.
தீ மூண்டபோது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு மீட்டர் அகலமுள்ள நடைபாதைப் பகுதியில் அமைந்துள்ள அக்கட்டடத்தின் மேல்தளங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் முதல் தளத்தில் மின்சைக்கிள் கடை அமைந்திருப்பதாகவும் விஎன்ஏ கூறியது.
அக்கம்பக்கக் குடியிருப்பாளர்கள் பட்டாசு வெடித்தது போன்ற சத்தத்தைக் கேட்டதாகவும் அச்சத்தில் வெளியே ஓடிவந்ததாகவும் கூறினர்.