காஸா: இஸ்ரேல், வியாழக்கிழமையன்று (மே 23) காஸா மீது மோசமான ஆகாயப் படைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
அதேவேளை, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கத் தான் தயாராய் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டு இணக்கம் காணப்பட்டால் அது, பிணைக் கைதிகளை விடுவிக்க வகைசெய்யும்.
பொழுது விடிவதற்கு முன்பு காஸா நகர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆகாயப் படைத் தாக்குதல்களில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக காஸா குடிமைத் தற்காப்பு அமைப்பு தெரிவித்தது. கொல்லப்பட்டவர்களில் 15 சிறுவர்களும் அடங்குவர் என்று அது குறிப்பிட்டது.
அல்-டராஜ் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டதாகவும் அதில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும் காஸா குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் மாஹ்முத் பசால் தெரிவித்தார். பள்ளிவாசல் வளாகத்தில் இருந்த மேலும் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.
காஸாவின் ஜபாலியா, ராஃபா நகர சாலைகளில் தீவிர சண்டை இடம்பெற்றது. ஹமாஸ் அமைப்பும் அதன் பங்காளியான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் இஸ்ரேலிய துருப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவித்தன.
போர் நிறுத்த ஒப்பந்தம் காணுமாறு இஸ்ரேல் மீதும் அதன் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மீதும் அனைத்துலக அளவில் நெருக்குதல் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாலஸ்தீன வட்டாரத்தை அங்கீகரிக்கப்போவதாக புதன்கிழமையன்று (மே 22) மூன்று ஐரோப்பிய நாடுகள் அறிவித்தன.
மேலும், திரு நெட்டன்யாகு, இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர், மூன்று ஹமாஸ் தலைவர்கள் ஆகியோருக்குக் கைதாணை பிறப்பிக்கும் முயற்சியை அனைத்துலக நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஒருவர் மேற்கொள்ளப்போவதாக இவ்வாரத் தொடக்கத்தில் செய்தி வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
கோபமடைந்த இஸ்ரேல் அந்நடவடிக்கைகளை மறுத்துள்ளது. கைதாணை பிறப்பிக்க அனைத்துலக நீதிமன்றம் எடுக்கும் முயற்சி தங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது என இஸ்ரேல் சாடியது. பாலஸ்தீன வட்டாரத்தை அங்கீகரிப்பது பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் வெகுமானம் என்றும் அது கண்டனம் தெரிவித்தது.