சீனாவுடன் பேச்சு நடத்த மீண்டும் அழைப்பு விடுத்த தைவானிய அதிபர்

1 mins read
6ae56619-a530-4a22-ba54-61d8e07a155a
சீனாவின் போர்ப் பயிற்சி குறித்துக் கவலை தெரிவித்த அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் தைவானிய அதிபர் லாய் சிங்-தே நன்றி தெரிவித்துக்கொண்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானிய அதிபர் லாய் சிங் டே, தன்னுடன் பேச்சு நடத்த மே 26ஆம் தேதி சீனாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

தைவானுக்கு அருகே இரண்டு நாள் போர்ப் பயிற்சியைச் சீனா நிறைவுசெய்த பிறகு அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

இரு தரப்புக்குமிடையே புரிதலை மேம்படுத்தவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து மீண்டும் நட்புறவை ஏற்படுத்தவும் விரும்புவதாக திரு லாய் கூறினார்.

தைவானைத் தனது அங்கம் என்று வலியுறுத்தும் சீனா, மே 23, 24ஆம் தேதிகளில் போர்ப் பயிற்சியை நடத்தியது.

மே 20ஆம் தேதி திரு லாய் ஆற்றிய பதவியேற்பு உரை அத்தீவின் அதிகாரபூர்வ சுதந்திரத்தை வலியுறுத்தியதாகவும் அதற்கான ‘தண்டனை’யாக இந்தப் போர்ப் பயிற்சியை நடத்தியதாகவும் பெய்ஜிங் கூறுகிறது.

திரு லாய் பிரிவினைவாதி என்று சீனா தொடர்ந்து சாடிவரும் வேளையில், தைவானைச் சொந்தம் கொண்டாடும் பெய்ஜிங்கின் கருத்தை அவர் நிராகரித்தார்.

மேலும் தைவானிய மக்கள்தான் தங்களின் வருங்காலம் குறித்து முடிவெடுக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் போர்ப் பயிற்சி குறித்துக் கவலை தெரிவித்ததற்காக அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் திரு லாய் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வட்டார நிலைத்தன்மையைப் பாதிக்கும் விதமாகத் தைவானிய நீரிணையில் எந்தவொரு நாடும் சலசலப்பு ஏற்படுத்துவதை அனைத்துலகச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றார் அவர். சீனாவின் அண்மைப் போர்ப் பயிற்சிக்குத் தைவானிய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்